குடிநீர், சாலை வசதிகள் கோரி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3 மற்றும் 4-வது வார்டு பகுதிகளில் போதிய சாலை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரக்கோரி மனு அளித்தனர்.
மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டுள்ள இப்பகுதி மக்கள், குடிநீர் வசதி இல்லாததால் வெளியிலிருந்து தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்தின் பெரும்பகுதியை குடிநீர் வாங்குவதற்கே செலவிட வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், 3 மற்றும் 4-வது வார்டு பகுதிகளில் சாலைகள் முறையாக அமைக்கப்படாததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் கூறினர்.
எனவே, குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதுடன், சாலை வசதிகளையும் விரைந்து ஏற்படுத்தித் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காதே கண்டித்து இன்று பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்
இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.




You must be logged in to post a comment.