28 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்.!

மேட்டுப்பாளையத்தில் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் நூதனப் போராட்டம்.!

எழுதியவர்: Baker BAker August 28, 2026, 2:07 pm

பவானி ஆற்றில் வீட்டுமனைப் பட்டா கோரிக்கை மனுக்களை மிதக்கவிட்டு போராட்டம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்காமல் ஏழை, எளிய மக்களை பல மாதங்களாக அலைக்கழித்து வருவதாகக் கூறி, வருவாய்த் துறையின் மெத்தனப் போக்கைக் கண்டித்து சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகி குணசேகரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஹபீப் ரஹ்மான், சானவாஸ், லூயிஸ், யாசர், ஷஃபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க பொதுச் செயலாளர் பாஷா, கோரிக்கை மனுக்களை பவானி ஆற்றில் மிதக்கவிட்டு போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நிலமற்ற கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்திலும், மக்கள் குறைதீர்க்கும் முகாம்களிலும் பலமுறை மனு அளித்துள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால், வருவாய்த் துறையினர் உரிய கள ஆய்வு மேற்கொள்ளாமல் ஆயிரக்கணக்கான மனுக்களைக் கிடப்பில் போட்டு அலட்சியம் காட்டி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதைக் கண்டித்து ஏற்கனவே பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர், அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் திரண்டனர்.

“எங்கள் வாழ்வாதாரக் கோரிக்கை மனுக்கள் அதிகாரிகளின் குப்பைத் தொட்டிக்குச் செல்வதற்குப் பதிலாக, ஜீவநதியான பவானி ஆற்றிலேயே போகட்டும்” எனக் கூறி, கோரிக்கை மனுக்களை ஆற்றில் மிதக்கவிட்டு நூதன முறையில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அப்போது, “பவானித் தாயே! அதிகாரிகளின் கண்களைத் திறந்து எங்கள் மனுக்களை தமிழக முதல்வரிடமும், துறை சார்ந்த அமைச்சரிடமும் கொண்டு சேர்த்துவிடு”, “லட்சக்கணக்கான மக்களின் தாகத்தைத் தீர்க்கும் பவானி தண்ணீரைக் குடிக்கும் அதிகாரிகளுக்கு, ஏழை எளிய மக்களின் கண்ணீரைத் துடைக்கும் வகையில் நற்புத்தி வரட்டும்” என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.

முக்கியக் கோரிக்கைகள்

  • பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டாவுக்காகக் காத்திருக்கும் தகுதியான ஏழை குடும்பங்களைக் கண்டறிந்து, காலதாமதமின்றி உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
  • ஏழை மக்களின் அடிப்படை உரிமைக் கோரிக்கைகளைப் புறக்கணித்து அலட்சியம் காட்டுவதாகக் கூறப்படும் மேட்டுப்பாளையம் வருவாய்த் துறை அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியர் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், அடுத்தகட்டமாக சிஐடியு மாநில மற்றும் மாவட்ட தலைமையிடம் ஆலோசனை பெற்று, பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உள்ளிருப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டத்தில் மகாலிங்கம், சித்திக், பார்த்தசாரதி உள்ளிட்ட ஏராளமான சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!