மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திணையத்தூர் பகுதியில் மதுரை–தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரியும் முக்கிய இணைப்புச் சாலை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திணையத்தூரில் இருந்து கருங்காவயல், கீழ்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் செல்லும் சுமார் 3 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த தார் சாலை, முறையான பராமரிப்பின்றி முற்றிலும் சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தார் பெயர்ந்து மண் சாலையாகவும், கரடுமுரடான கற்கள் நிறைந்த பாதையாகவும் மாறியுள்ளது.
இதனால் இவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையில் உள்ள கற்கள் காரணமாக நடந்து செல்லும் பொதுமக்களின் கால்களில் காயங்கள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், விவசாயிகள் மற்றும் அவசரத் தேவைகளுக்காகப் பயணிக்கும் பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் பயன்படுத்தும் இந்தச் சாலை, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் அவசர கோரிக்கை:
10 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் பிரச்னைக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலையை தரமான முறையில் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருங்காவயல், கீழ்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.