கோவை மாவட்டம்: மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல தலைமுறைகளாக வாடகை வீடுகளிலும், புறம்போக்கு நிலங்களிலும் வசித்து வரும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நூதன முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்–ஊட்டி சாலையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு, ஏழை மக்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிப்பதாகக் கண்டனம் தெரிவித்து, காந்தி சிலையிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு CITU பொதுத் தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் தோழர் ஷானவாஸ் தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் தாலுகா CITU பொதுத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ். பாஷா, போராட்டத்தின் நோக்கம் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
சங்க நிர்வாகிகள் சம்சுதீன், முகமது அலி ஜின்னா, ஹபிபுல்லா, ரங்கநாதன், லூயிஸ் ராஜா, ரகுமான், அக்பர் சித்திக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான உழைக்கும் மக்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
“மனுக்கள் மீது நடவடிக்கை எப்போது?”
பல ஆண்டுகளாக இலவச வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தொடர்ந்து மனுக்கள் அளித்து வருவதாகவும், ஆனால் அவற்றின் மீது உரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் போராட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
தகுதியுள்ள ஏழை, எளிய குடும்பங்களை அதிகாரிகள் உடனடியாக கணக்கெடுத்து கண்டறிந்து, அவர்களுக்கு அரசு புறம்போக்கு அல்லது தகுதியான நிலங்களைத் தேர்வு செய்து இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என CITU வலியுறுத்தியது.
மேலும், ஏழை மக்களின் அடிப்படை வாழ்வாதாரமான “சொந்தமாக ஒரு வீடு அமைக்க இடம்” என்ற கோரிக்கையை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது என்றும், அதிகாரிகள் தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
“நடவடிக்கை இல்லையெனில் முற்றுகைப் போராட்டம்”
மக்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அடுத்த கட்டமாக வருவாய்த்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரமான தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என CITU நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
ஏழை மக்களின் மனுக்களை கிடப்பில் போடாமல், தகுதியான குடும்பங்களை அடையாளம் கண்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகமும் வருவாய்த்துறையும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே போராட்டத்தின் முக்கிய வலியுறுத்தலாக இருந்தது.




You must be logged in to post a comment.