28 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலிச் செய்திகளுக்கு எதிராக ஊடகங்கள் களமிறங்க வேண்டும்; போதை இல்லா தமிழ்நாடு உருவாக்க ஊடகங்களின் பங்கு அவசியம்.!

போலிச் செய்திகளுக்கு எதிராக ஊடகங்கள் களமிறங்க வேண்டும்; போதை இல்லா தமிழ்நாடு உருவாக்க ஊடகங்களின் பங்கு அவசியம்.!

எழுதியவர்: Baker BAker July 28, 2026, 8:38 pm

டிஜிட்டல் யுகத்தில் வேகமாகப் பரவும் போலிச் செய்திகள் சமூகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கவும், “போதைப்பழக்கம் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை எட்டவும் பொறுப்பான ஊடகப் பணி காலத்தின் கட்டாயம் 



மக்களின் கருத்துகளையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஜனநாயகப் பாலமாக ஊடகங்கள் – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்  எம். சிவகுரு பிரபாகரன் உரை

 

 

மாவட்டத்தில் தனியார் மஹாலில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் நடைபெற்ற  பயிலரங்கில், மாவட்ட ஆட்சியர்  எம். சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்து உரையாற்றினார். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மட்டுமல்லாமல், மக்களின் கருத்துகளையும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஜனநாயகப் பாலமாக ஊடகங்கள் செயல்படுகின்றன என்றார். மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு மக்கள் நல முயற்சிகள் ஊடகங்களின் ஒத்துழைப்பால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

சிறப்புரையாற்றிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், போதைப்பொருள் ஒழிப்புப் பணியில் காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வை உருவாக்குவதில் ஊடகங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றார். குறிப்பாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களிடம் தொடர்ச்சியான விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே “போதை இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைய முடியும் என்று வலியுறுத்தினார்.

 

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் (பொறுப்பு) வி. பழனிச்சாமி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் போலிச் செய்திகள் அதிகரித்து வருவது ஊடக உலகின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். செய்திகளில் துல்லியம், தெளிவு, சுருக்கம் ஆகியவற்றுடன் தொழில்முறை அறநெறிகளையும் ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றார்.

 

பயிலரங்கில் நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகளில், டிஜிட்டல் தகவல்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் நடைமுறைகள், போலிச் செய்திகளை அடையாளம் காணும் வழிமுறைகள், செயற்கை நுண்ணறிவு காலத்தில் ஊடகங்களின் பொறுப்பு உள்ளிட்ட தலைப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டன.

 

நிலையான மீன்பிடித் தொழில் தொடர்பான அமர்வில், மண்டபம் மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் விகாஸ், கடற்பாசி வளர்ப்பு மற்றும் கூண்டு மீன் வளர்ப்பின் மூலம் கடலோர மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வாய்ப்புகளை எடுத்துரைத்தார்.

 

‘மை பாரத்’ அமைப்பின் மாவட்ட இளைஞர் அலுவலர்  மேனுவல் பெர்லி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் 114 இளைஞர் மன்றங்களும் ‘மை பாரத்’ தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறினார்.

 

சென்னை பத்திரிகை தகவல் அலுவலக இயக்குநர் பி. அருண் குமார், டிஜிட்டல் யுகத்தில் தகவல்களை பகிர்வதற்கு முன் அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கினார்.

 

 ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்ற இந்தப் பயிலரங்கு, ஊடகங்களின் சமூகப் பொறுப்பையும், தகவல் நம்பகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலியுறுத்திய நிகழ்வாக அமைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!