இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே மீன்பிடி வலையில் சிக்கிய சுமார் 100 கிலோ எடையுள்ள அரிய வகை கடல் ஆமையை, தங்களது மீன்பிடி வலையை அறுத்து பாதுகாப்பாக மீட்டு மீண்டும் கடலில் விட்ட மீனவர்களின் மனிதநேய செயல் பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.
தொண்டி புதுக்குடி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், கண்ணன், முகேஷ், விக்னேஷ்வரன், குமார் மற்றும் கேசவன் உள்ளிட்ட ஆறு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
நடுக்கடலில் விரிக்கப்பட்டிருந்த வலையை இழுத்தபோது, அதில் சுமார் 100 கிலோ எடையுள்ள மிகப்பெரிய அரிய வகை கடல் ஆமை சிக்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஆமையின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் படகை நிறுத்திய மீனவர்கள், வலை சேதமடையும் என்பதைப் பொருட்படுத்தாமல் அதை அறுத்து ஆமையை பத்திரமாக மீட்டனர்.
பின்னர் எந்தவித காயமும் இன்றி அந்த கடல் ஆமையை மீண்டும் கடலுக்குள் விட்டனர். இந்த மீட்புக் காட்சியை மீனவர்கள் தங்களது கைப்பேசியில் பதிவு செய்திருந்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயல்பட்ட தொண்டி புதுக்குடி மீனவர்களின் இந்த மனிதநேய நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




You must be logged in to post a comment.