ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பாலைக்குடி பகுதியில், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 336 கிலோ கடல் அட்டைகளை காவல்துறையினர் அதிரடி சோதனையில் பறிமுதல் செய்தனர். சுமார் ₹10 லட்சம் மதிப்புள்ள இந்த கடல் அட்டைகள் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அழிக்கப்பட்டன.
பாண்டி கோவில் அருகே உள்ள தோட்டம் ஒன்றில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், திருப்பாலைக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடினர்.
தொடர்ந்து நடைபெற்ற சோதனையில், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் பாத்திரங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 336 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேல்நடவடிக்கைக்காக ராமநாதபுரம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தனவா என்ற கோணத்தில் காவல்துறையினரும் வனத்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் திருவாடானை உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டன. பின்னர், நீதிபதி ஆண்டனி ரிசாந்தேவ் முன்னிலையில் அவை கொட்டி அழிக்கப்பட்டன. இந்த நிகழ்வின்போது வனத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கடல்வள உயிரினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்




You must be logged in to post a comment.