27 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் சிறையில் அடைப்பு..

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து மிரட்டியவர் சிறையில் அடைப்பு..

எழுதியவர்: Abubakker Sithik July 27, 2026, 5:28 pm

பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்தில் சைபர் குற்றவாளியை தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், 24 வயதுடைய பெண் ஒருவர், தன்னுடைய புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, போலியாக இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி அதிலிருந்து மிரட்டல் விடுக்கப்படுவதாக தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வைத்தே போலியான கணக்கினை உருவாக்கி, அதிலிருந்து அந்த பெண்ணிற்கே Request கொடுத்து, ஆபாசமாக பேச மறுத்ததால், அவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பலருக்கு அனுப்பி சமூக வலை தளங்களில் வெளியிடுவதாகவும், புகார் தாரரின் வீட்டிலேயே மார்பிங் செய்த புகைப்படத்தை ஒட்டி அவதூறு ஏற்படுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாகவும், தொடர்ந்து புகார்தாரரின் புகைப்படத்தை அந்த இன்ஸ்டாகிராம் கணக்கின் Profile Picture ஆக பயன்படுத்தி, தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் மெசேஜ் அனுப்பியதாகவும் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வரப்பெற்றது. 

இதுகுறித்து, மேற்படி புகாரை தொடர்ந்து, உடனடியாக தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட நபரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் உத்தரவின் பேரிலும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜீலியஸ் சீசர் மேற்பார்வையிலும், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வசந்தி தலைமையிலான தனிப்படை சம்பந்தப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கின் விவரங்கள் சேகரித்தும், தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பாறு அஞ்சல், ஸ்ரீராமபுரம் என்ற கோட்டைமேடு பகுதையைச்சேர்ந்த நாராயணன் மகன் தேரிச்சாமி வயது 23 என்பவர் மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது, 

உடனடியாக தூத்துக்குடிக்கு விரைந்த தனிப்படையானது மேற்படி தேரிச்சாமி என்பவரை வழக்கு பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள்ளேயே கைது செய்து தீவிர விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேற்படி எதிரியான தேரிச்சாமி என்பவர் இணையத்தில் வரும் Chat Application மூலம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண் சில நாட்களாக தேரிச்சாமியிடம் பேசாமல் இருந்ததால், அந்த பெண்ணின் இண்ஸ்டாகிராமில் சகோதரி என குறிப்பிட்டிருந்த புகார்தாரரை தொடர்பு கொண்டு அவரிடமும் தவறாக பழக நினைத்து பேசியதும், அதற்கு மறுத்ததால் தன்னிடம் ஆபாசமாக பேசவில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு அசிங்கப்படுத்துவதாகவும், மார்பிங் செய்த புகைப்படத்தை புகார்தாரரின் வீட்டிலேயே ஒட்டி அவமானப்படுத்துவேன் என்று மிரட்டியதும் தெரியவந்தது.

மேலும் மேற்படி தேரிச்சாமி என்பவர் மீது ஏற்கனவே கோயம்புத்தூர் மாநகர சைபர் கிரைம் பிரிவிலும் இதே போன்று வேறு பெண்ணிற்கு தவறாக மெசேஜ் அனுப்பியதற்காக கடந்த வருடம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தற்போது அந்த வழக்கும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய செல்போன் மற்றும் சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் மேற்படி தேரிச்சாமி கனம் தென்காசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பொதுமக்களுக்கு அறிவுரை:  சமூக வலை தளங்களில் அறிமுகமில்லாத நபர்களின் நண்பர் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம்.

தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருக்கவும்.

ஆபாச மிரட்டல், புகைப்பட மார்பிங், போலி கணக்குகள் போன்ற சைபர் குற்றங்கள் தொடர்பாக உடனடியாக 1930 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் புகார் பதிவு செய்யவும்.

இதுபோன்ற குற்றங்கள் குறித்து அருகிலுள்ள சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். சைபர் குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு வழங்குமாறு சைபர் கிரைம் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!