26 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை பொதுமக்களை அரசு அதிகாரிகள் புறக்கணிக்கக் கூடாது” – கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்.!

கீழக்கரை பொதுமக்களை அரசு அதிகாரிகள் புறக்கணிக்கக் கூடாது” – கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்.!

எழுதியவர்: Baker BAker July 26, 2026, 10:26 pm

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் குடிநீர், மின்சாரம், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அரசு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் புதிய அலுவலகம் இன்று கீழக்கரை அரசு மருத்துவமனை முன்பாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஜமாஅத்தார்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு, அவற்றை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு கிடைக்கச் செய்வதே கூட்டமைப்பின் முக்கிய நோக்கமாகும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூட்டமைப்பின் இளைஞர்கள் கூறுகையில், “குறை சொல்ல மட்டும் அல்ல… குறை தீர்க்கவும் வந்தோம். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் தாமதமின்றி நிறைவேற வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம். ஒவ்வொரு மனுவும் உரிய அதிகாரிகளிடம் சென்றடையும் வரை, அதற்கு தீர்வு கிடைக்கும் வரை எங்களின் முயற்சி தொடரும். அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொறுப்பான இணைப்புப் பாலமாக செயல்படுவோம்” என்றனர்.

மேலும், அரசு அறிவிக்கும் அனைத்து நலத்திட்டங்களும் தகுதியான பயனாளிகளை முழுமையாக சென்றடைய தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளும் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற பல பொதுமக்கள், கூட்டமைப்பின் மக்கள் நலச் சேவையை பாராட்டி, தாங்களும் அமைப்பில் இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர். அவர்களை கூட்டமைப்பின் நிர்வாகிகள் வரவேற்று உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

சமூக ஆர்வலர்கள் பேசுகையில், “இன்றைய இளைஞர்கள் புதிய கண்ணோட்டத்துடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் மக்கள் சேவையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்க மாற்றமாகும். குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவற்றுக்கு தீர்வு காணும் முயற்சியிலும் அவர்கள் முன்வந்திருப்பது சமூகத்திற்கு நம்பிக்கையளிக்கிறது” என்று பாராட்டினர்.

நிகழ்வின் நிறைவில், “கீழக்கரை மக்களின் நியாயமான உரிமைகள் முழுமையாக நிலைநாட்டப்படும் வரை எங்களின் மக்கள் சேவைப் பயணம் தொடர்ந்து நடைபெறும்” என்று கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் உறுதியளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!