2 ஆண்டுகளில் சிதைந்த சாலை… மாணவர்கள் தினமும் அவதி! – கீழக்கரை நகராட்சி அலட்சியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு பிரதான சாலை, அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது முழுமையாக சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இந்தச் சாலையை தினமும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மருத்துவ வாகனங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதன் மோசமான நிலை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை முழுவதும் பள்ளங்கள் உருவாகியிருப்பதால், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர மருத்துவ சேவைகளின் இயக்கமும் பாதிக்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுமாறி விழும் அபாயம் தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சாலை மேலும் சேதமடைந்து, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் சிரமத்திற்குள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்தப் பிரச்சினை குறித்து பலமுறை கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளிக்கப்பட்டும், அதிகாரிகள் ஆய்வு நடத்தி புகைப்படங்கள் எடுத்து சென்றதைத் தவிர நிரந்தர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பின்னரும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தரமற்ற சாலைப் பணிகளால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும், நகராட்சி பொறியாளர்களின் போதிய கண்காணிப்பு இல்லாததால் புதிதாக அமைக்கப்படும் சாலைகள் குறுகிய காலத்திலேயே சேதமடைவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல், கேபிள் பதித்தல் மற்றும் குடிநீர் குழாய் அமைத்தல் போன்ற பணிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட சாலைகள் திட்டமிடல் இன்றி மீண்டும் மீண்டும் தோண்டப்படுவதால் சாலைகளின் தரம் மேலும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற கீழக்கரை நகர்மன்றக் கூட்டத்தில், நகரின் பல்வேறு சாலைகளை சீரமைப்பதற்கான டெண்டர்கள் விடப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும் என உறுதியளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனையடுத்து, “மக்களின் உயிர் பாதுகாப்பும், மாணவர்களின் நலனும் முக்கியமா? அல்லது நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமா?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், கீழக்கரை தெற்கு தெரு பிரதான சாலையை உடனடியாக தரமான முறையில் மறுசீரமைக்கவும், எதிர்காலத்தில் அனைத்து துறை பணிகளையும் ஒருங்கிணைத்து சாலைப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.




You must be logged in to post a comment.