ராமநாதபுரம் மாவட்டம், வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட வழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் குழுமை திருவிழா கடந்த 14-ஆம் தேதி காப்புக் கட்டும் நிகழ்வுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக ஆலய பூசாரி துரைராஜ் கரகம் ஏந்தி வர, மேளதாளங்கள் முழங்க ஏராளமான பக்தர்கள் குலவையிட்டு அம்மனை பக்தி பரவசத்துடன் வரவேற்றனர்.
பின்னர் கரகம் ஊர்வலமாக கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து இறக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மேலும், ஆலய பூசாரிகள் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினர்.
திருவிழாவை முன்னிட்டு வழுதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




You must be logged in to post a comment.