ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பழைய குத்துப் பள்ளி தெரு, பகுதிகளில் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சாலை தோண்டி குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், பணிகள் முடிந்த பிறகும் சாலைக் கற்களை முறையாக மீண்டும் அமைக்காமல் சிதிலமடைந்த நிலையிலேயே விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.
குறுகிய சாலைகளாக உள்ள இந்த பகுதிகளில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் தினமும் பெரும் சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலர் தடுமாறி கீழே விழும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த நேரத்திலும் பெரிய விபத்து ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து பலமுறை கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். “மக்களின் உயிர் பாதுகாப்பை விட அதிகாரிகளுக்கு அலட்சியமே முக்கியமா?” என்ற கேள்வியும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்த பகுதி நகராட்சி சேர்மனின் வார்டாக இருந்தும், அதிகாரிகள் உரிய கண்காணிப்பை மேற்கொள்ளாமல் மெத்தனமாக செயல்படுகிறார்களா என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. நேரில் ஆய்வு செய்வதற்குப் பதிலாக பெயரளவுக்கு புகைப்படம் எடுத்து செல்வதிலேயே அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த சாலை அப்பகுதி மக்களின் அன்றாட போக்குவரத்திற்கும், பள்ளி மாணவர்கள், முதியோர், அவசர மருத்துவ சேவைகள், திருமணம், இறப்பு உள்ளிட்ட அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கும் பிரதான வழித்தடமாக இருப்பதால், இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து, சிதிலமடைந்த சாலையை உடனடியாக சீரமைப்பதுடன், திட்டப் பணிகளை முறையாக கண்காணிக்கத் தவறிய நகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வலியுறுத்தியுள்ளனர்.
“மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மக்களின் வாழ்க்கையையே சிரமப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. அடிப்படை வசதிகளை உறுதி செய்வதே நகராட்சி நிர்வாகத்தின் முதல் கடமை” என சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.







You must be logged in to post a comment.