22 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தீவிரம்: பொதுப் பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு.!

கீழக்கரையில் கழிவுநீர் கால்வாய் பிரச்சினை தீவிரம்: பொதுப் பாதை ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு.!

எழுதியவர்: Baker BAker July 22, 2026, 2:16 pm

அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

 

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப் படாததால், பொதுமக்கள் நாள்தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்நகரில், கழிவுநீர் தெருக்களில் தேங்கி வழிவதால் சுகாதாரக் கேடு, துர்நாற்றம் மற்றும் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

குறிப்பாக, நகரின் பல்வேறு பகுதிகளில் முறையான கழிவுநீர் வடிகால் வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் ஓடுவது வழக்கமாகியுள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும், சாலைகள் சேதமடைவதுடன், பொதுமக்கள் நடந்து செல்லவும் வாகனங்களில் பயணிக்கவும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

 

அதேபோல், சிலர் தங்களது வசதிக்காக பொதுப் பாதைகளிலேயே கழிவுநீர் தொட்டிகள் அமைத்து, குழாய்கள் பதித்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் பாதசாரிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பல இடங்களில் தவறி விழுந்து காயமடையும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அண்டை வீட்டாரிடையே தகராறு, மனக்கசப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கும் வழிவகுப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பொதுப் பயன்பாட்டுக்கான பாதைகள் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப் படுவது சட்டவிரோதமானது என்றாலும், நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டும், அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்து செல்வதைத் தவிர நிரந்தரத் தீர்வு எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும், பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக முழுமை பெறாமல் கிடப்பில் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 

எனவே, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நகரம் முழுவதும் சிறப்பு ஆய்வு மேற்கொண்டு, பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய் திட்டங்களை உடனடியாக முழுமைப்படுத்த வேண்டும் என்றும், பொதுப் பாதைகளை ஆக்கிரமித்து கழிவுநீர் தொட்டிகள் மற்றும் குழாய்கள் அமைத்துள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணித்து அலட்சியமாக செயல்பட்டு வரும் நகராட்சி அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!