ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை மின்வாரிய அலுவலக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், 24 மணி நேரமும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதால் பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
கீழக்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பழுதடைந்த மின் கம்பங்கள், சேதமடைந்த மின் உபகரணங்கள், டிரான்ஸ்பார்மர் கோளாறுகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து ஆய்வு செய்து, அவற்றை உடனுக்குடன் சரிசெய்வதோடு, புதிய மின் கம்பங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திடீர் மின்வெட்டு அல்லது மின் விநியோகத்தில் ஏற்படும் கோளாறுகள் குறித்து தகவல் கிடைத்தவுடன், பகல்–இரவு பாராமல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணியாளர்கள் பழுதுகளை சரிசெய்து, பொதுமக்களுக்கு தடையற்ற மின் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக இரவு நேரங்களிலும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவசர சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கீழக்கரை மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்ததாவது: “பொதுமக்களுக்கு மின் சேவை தொடர்பாக ஏதேனும் குறைகள், சந்தேகங்கள் அல்லது புகார்கள் இருந்தால், எந்தவித இடைத்தரகரையும் நாடாமல் நேரடியாக மின்வாரிய அலுவலகத்தையோ அல்லது அதிகாரிகளையோ தொடர்புகொள்ளலாம். பெறப்படும் அனைத்து புகார்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு வழங்க மின்வாரியத் துறை எப்போதும் தயாராக உள்ளது” என்றார்.
24 மணி நேரமும் பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி பணியாற்றும் கீழக்கரை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் சேவைக்கு பொதுமக்கள் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பொதுமக்கள் தங்களது தேவைகள் மற்றும் புகார்களை நேரடியாக தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .












You must be logged in to post a comment.