நகராட்சி அலட்சியத்தால் மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறிய பொதுக் கழிப்பறை – “பராமரிப்பு நிதி எங்கே?” என பொதுமக்கள் கேள்வி; அலட்சிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜின்னா தெரு அருகே நகராட்சி நிர்வாகத்திற்குச் சொந்தமான இலவச பொதுக் கழிப்பறை, பல மாதங்களாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசு சொத்துகள் வீணடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.
ஒருகாலத்தில் பொதுமக்கள் தினசரி பயன்படுத்திய இந்த கழிப்பறை, தற்போது உடைந்த கதவுகள், சேதமடைந்த கழிப்பிடங்கள், தண்ணீர் வசதி இல்லாமை, துர்நாற்றம் மற்றும் குப்பைகள் குவிந்த நிலை காரணமாக முற்றிலும் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறியுள்ளது.
பராமரிப்பு இல்லாத இந்த இடம் தற்போது மதுப்பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் கழிப்பறை அருகே மின் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் உயிரிழப்பு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
“மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கட்டிடம் இன்று சீரழிந்து கிடக்கிறது. பராமரிப்பு நிதி எங்கே செல்கிறது? பொதுச் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?” என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொது வசதிகளை பராமரிப்பதில் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நேரடி ஆய்வு மேற்கொண்டு, சிதிலமடைந்த பொதுக் கழிப்பறையை முழுமையாக புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும். மேலும், பராமரிப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.




You must be logged in to post a comment.