17 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை:

திருவாடானை அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்து வரும் மாணவர் சேர்க்கை:

எழுதியவர்: Baker BAker July 17, 2026, 2:20 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்து வருவது கல்வி ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது. 

 

பல பள்ளிகளில் தற்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். மேலும், சில பள்ளிகளில் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக புதிய மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், கல்வித்துறை அதிகாரிகளில் சிலர் பள்ளிகளின் உண்மையான நிலையை மறைத்து, தவறான தகவல்களை அச்சு ஊடகங்களுக்கு வழங்கி, அதன் மூலம் அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் தவறாக வழிநடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

அண்மையில், திருவாடானை அருகே உள்ள கருப்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டுமே கல்வி கற்று வந்தது ஊடகங்களில் வெளியாகியது. இதையடுத்து மாவட்ட மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரிகள் பள்ளியை நேரில் பார்வையிட்டு, பெற்றோர்களுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர், அப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக சில செய்தித்தாள்களுக்கு தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது வரை அப்பள்ளியில் அதே ஒரு மாணவி மட்டுமே கல்வி கற்று வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதுபோன்று, ஆதியாகுடி கிராமத்தில் மாணவர்கள் இல்லாத அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்கை இருப்பதாகக் காட்டும் நோக்கில், புலியால் அரசு பள்ளியில் படித்து வந்த 3 மற்றும் 4-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவரை வட்டாரக் கல்வி அலுவலர் கட்டாயமாக இடமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தோற்றமளிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நீண்டகாலத் திட்டங்கள் வகுப்பதற்குப் பதிலாக, கணக்குகளை உயர்த்திக் காட்டும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். பள்ளிகளின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல், விளம்பர நோக்கில் செயல்படுவது கல்வித்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

இந்த விவகாரம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது, “முறையான விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

திருவாடானை தாலுகாவில் 10-க்கும் குறைவான மாணவர்களுடன் செயல்பட்டு வரும் 20-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளின் நிலையை தமிழக அரசு அவசரமாக ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளின் உண்மை நிலையை வெளிப்படையாக மதிப்பீடு செய்து, தவறான தகவல்களை வழங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மாணவர் சேர்க்கையை உண்மையான முறையில் அதிகரிக்க தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!