வியட்நாமில் நடைபெற்ற சுற்றுலா படகு விபத்தில் சிக்கி, சமயோசிதமாக செயல்பட்டு உயிர் தப்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், அந்த திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவரை ராமநாதபுரம் செல்போன் விற்பனையாளர்கள் சங்கத்தினர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, உயிர் தப்பியதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், அழகிய கடற்கரைகள் மற்றும் தீவுகளால் உலகம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த நிலையில், தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று தனது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர்களுக்கு நான்கு நாள் இன்பச் சுற்றுலாவை ஏற்பாடு செய்திருந்தது.
சுற்றுலாவின் மூன்றாவது நாளில், 36 பேருடன் அதிவேக சொகுசு படகு தீவுகளுக்குச் சென்று, துறைமுகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. துறைமுகத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் வந்தபோது, திடீரென பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமடைந்தது. பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததால் படகு கட்டுப்பாட்டை இழந்து, சில நொடிகளில் தலைகீழாக கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 10 பேர் தமிழர்கள் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிர் தப்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்வர் கூறுகையில், “படகின் அதிகப்படியான வேகம் மற்றும் வழக்கத்திற்கு மாறாக கடல் அலையின் வேகம் அதிகரித்ததே விபத்துக்கு முக்கிய காரணம். நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தவுடன், உடனடியாக படகின் கதவைத் திறந்து கடலில் குதித்தேன். சிறிது தூரம் நீந்திச் சென்று கவிழ்ந்து கிடந்த படகின் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்டு உயிர் தப்பினேன். பின்னர் மீட்புக் குழுவினர் வந்து எங்களை பாதுகாப்பாக கரைக்கு அழைத்துச் சென்றனர்,” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “அந்த பகுதிக்கு கடல் வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்ததால், மீட்புக் குழுவினரும் மருத்துவக் குழுவினரும் கடல் மார்க்கமாகவே வர வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். விபத்து நடந்த நேரத்தில் பதற்றப்படாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டதே என் உயிரைக் காப்பாற்றியது,” என்று தெரிவித்தார்.
அதேபோல், “வியட்நாமில் இருந்த இந்திய தூதரகமும், அந்த நாட்டு அரசும் சிறப்பாக செயல்பட்டன. நான் உயிர் பிழைத்தது இறைவனின் அருளால் மட்டுமே,” என்றும் விக்னேஷ்வர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
விபத்தில் இருந்து உயிர் தப்பி சொந்த ஊர் திரும்பிய விக்னேஷ்வரை அவரது சக செல்போன் விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சந்தித்து நலம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் சுற்றுலா பயணங்களின் போது பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் இயற்கை சீற்றங்களை மதித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.




You must be logged in to post a comment.