ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள், தங்களது 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணிநலன் தொடர்பான கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தூய்மை காவலர்களுக்கு மாதச் சம்பளத்தை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும், இரவு 10 மணி வரை மிரட்டி வேலை வாங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும், சம்பளத்தில் தன்னிச்சையாக பிடித்தம் செய்வதை கைவிட வேண்டும், ஊராட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் நிலுவைத் தொகையை கணக்கீடு செய்து வழங்க வேண்டும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,600 வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்கு தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.




You must be logged in to post a comment.