ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்பட்ட வரலாற்றுப் பிரிவில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்நிலையில், அந்தப் பிரிவில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேறுமாறும் அல்லது வேறு பாடப்பிரிவைத் தேர்வு செய்யுமாறும் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் அறிவுறுத்தியதால் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாணவர்களும் பெற்றோர்களும் விளக்கம் கேட்டபோது, வரலாற்றுப் பிரிவுக்குத் தேவையான ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகளை முறையாக நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்டக் கல்வி அலுவலரின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திடீரென வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பால் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதிய கல்வியாண்டு தொடங்கிய நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதையடுத்து சிக்கல் கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, வரலாற்றுப் பிரிவை தொடர்ந்து செயல்படுத்த தேவையான ஆசிரியர்களை உடனடியாக நியமிக்கவும், ஏற்கனவே சேர்க்கை பெற்ற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாணவர்களின் கல்வி எந்தவித பாதிப்பும் இன்றி தொடர தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதாக உறுதியளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




You must be logged in to post a comment.