தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்காக இரும்பு தாங்கு உத்திரங்கள் நேற்று கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பாலம் அமைக்கும் பணி விரைவில் நிறைவு பெறலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாவூர்சத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் 900 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் கொண்டது. தண்டவாளத்துக்கு கிழக்கே 22 பில்லர்கள், மேற்கே 22 பில்லர்கள் என மொத்தம் 44 பில்லர்கள் மற்றும் தண்டவாளத்தின் இருபுறமும் 4 இரட்டை பில்லர்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ரயில் தண்டவாளத்துக்கு மேலே பாலம் அமைக்கும் பணிகள் தவிர மற்ற பணிகள் முடிவடைந்துவிட்டன.
இந்நிலையில், இரும்பு தாங்கு உத்திரங்கள் நேற்று லாரியில் கொண்டு வந்து இறக்கப்பட்டுள்ளன. இதனால், தண்டவாளத்துக்கு மேலே அமைய உள்ள பாலப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது. பாவூர்சத்திரம் ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்து விட்டால் போக்குவரத்து நெருக்கடி குறையும் என்பதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை தினமும் எதிர்நோக்கி வருகின்றனர். இன்னும் காலம் தாழ்த்தப்படாமல் மேம்பால பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் என இரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.