தமிழ்நாட்டில் அதிகமான அணைகளை கட்டியவர் காமராசர். பல ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. தமிழகத்தை தலை நிமிரச் செய்த தியாகச் செம்மல், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர். எளிமையின் இலக்கணமாகவும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திய மாபெரும் தலைவராகவும் விளங்கிய காமராசரின் வரலாற்றை அறிவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும்.
பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த 1954 முதல் 1963 வரையிலான கால கட்டத்தில், மாநிலத்தின் நீர்ப்பாசன மற்றும் விவசாயத் தேவைகளுக்காக பல முக்கிய அணைகள் கட்டப்பட்டன. மணிமுத்தாறு, வைகை, அமராவதி, கீழ்பவானி, சாத்தனூர் போன்ற முக்கிய அணைகள் காமராசரின் ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டன.
கோயம்புத்தூர் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் பல அணைகள் (ஆழியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப் பள்ளம்) இணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த பாசனத் திட்டமாக இவரது காலத்தில் உருவாக்கப்பட்டது. இந்த அணைகள் அனைத்தும் தமிழ்நாட்டின் வேளாண்மைப் புரட்சிக்கும், குடிநீர் தேவைக்கும் காமராசர் அளித்த மாபெரும் பங்களிப்புகளாகும்.
எளிமையும், தெளிவான சிந்தனையும், கொள்கை சார்ந்த நோக்கமும் அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதிக்கும் பார்வையும் காமராசருக்கே உரிய தனித் தன்மைகள். இதனால் தான் பெரியாரும், அண்ணாவும் அவரை நேசிக்க முடிந்தது. அவராலும் அவர்களை நேசிக்க முடிந்தது. ஏழை மாணவர்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவச சீருடைத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் காமராசர்.
காமராசரின் பொற்கால ஆட்சியில் வறுமையில் வாடிய தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டார். மூடப்பட்டிருந்த 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன், 14,000 புதிய பள்ளிகளையும், ஏழை எளிய குழந்தைகள் பசி இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்தார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.
மேலும், மதுரைப் பல்கலைக் கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதே போன்று சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கும் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரசியலில் நேர்மை, எளிமை, மற்றும் தொண்டு ஆகியவற்றைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் காமராஜர். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஆனாலும் அவரது சாதனைகள் என்றும் தமிழக மக்களால் நினைவு கூறப்படும்.




You must be logged in to post a comment.