15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூன்று ஆண்டுகளாக முடங்கிய 17 வீடுகள்… வீடின்றி தவிக்கும் நரிக்குறவர் குடும்பங்கள்… “

மூன்று ஆண்டுகளாக முடங்கிய 17 வீடுகள்… வீடின்றி தவிக்கும் நரிக்குறவர் குடும்பங்கள்… “

எழுதியவர்: Baker BAker July 15, 2026, 10:16 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட சமத்துவபுரம் அருகே வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்களுக்கு அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தரப்பட வேண்டிய வீடுகள் மூன்று ஆண்டுகளாகியும் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மொத்தம் 17 வீடுகள் கட்டுவதற்காக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால் பயனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதற்கிடையில், இன்னும் முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத சில வீடுகள் முழுமையாக நிறைவு பெற்றதாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு, அதற்கான அரசுப் பணம் (பில்) பெறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டின் படி அரசு நிதி முறைகேடு நடைபெற்றுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் பல வீடுகளில் முன்புறச் சுவர் மட்டுமே கட்டப்பட்ட நிலையில், பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகள் முழுமையடையாமல் காணப்படுகின்றன. சிமெண்ட் பூச்சு பணிகளும் முழுமை அடையவில்லை என்றும் கதவுகள், ஜன்னல்கள், நிலைக்கதவுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் பொருத்தப்படாமல் வீடுகள் அரைகுறையாக காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றன

.

இதுகுறித்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கண்ணீருடன் கூறியதாவது:

“கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் எங்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். வீடு கட்டுவதற்காக எங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட அரசுப் பணத்தையும் எங்களிடம் இருந்து பல்வேறு காரணங்களைக் கூறி எடுத்துக்கொண்டனர். ஆனால் வீடுகள் மட்டும் இன்றுவரை முழுமை பெறவில்லை. எங்களை இப்படி ஏமாற்றி சித்திரவதை செய்வதற்குப் பதிலாக சுட்டுத் தள்ளிவிடுங்கள்.”

என்ன வேதனையுடன் தெரிவித்தனர்

மேலும்”கட்டப்பட்டுள்ள சில வீடுகளும் மிகவும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளன. செங்கற்களுக்குப் பதிலாக தரமற்ற ஹாலோ பிளாக் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளில் தரம் இல்லை என்றும் குற்றம் சாட்டை உள்ளனர்.

இதற்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமும், முறையான கண்காணிப்பு இல்லாமையுமே காரணம்” என்றனர்.

புதிய வீடுகள் விரைவில் கட்டித் தரப்படும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே வசித்து வந்த குடிசை வீடுகளையும் இடித்துவிட்டதாக வேதனையுடன் தெரிவித்த மக்கள், தற்போது திறந்த வெளியில் மற்றும் தற்காலிக குடிசைகளில் குழந்தைகள், முதியவர்கள் உட்பட குடும்பத்துடன் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறினர்.

மழைக்காலங்களில் குடியிருக்க இடமின்றி பெரும் துயரத்துக்கு ஆளாகி வருவதாகவும், பலமுறை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டுமானப் பணிகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பல ஆண்டுகளாக நிறைவு பெறாமல் கிடக்கும் வீடுகளை உடனடியாகத் தரமான முறையில் கட்டி முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் நரிக்குறவர் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசின் நலத்திட்டங்கள் உண்மையான பயனாளிகளை சென்றடைய வேண்டுமெனில், இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!