ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள், தடை செய்யப்பட்ட கொல்லிமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி, ராமநாதபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஏர்வாடி தர்கா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதாகவும், இதனால் கடல் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தட்டிக்கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதில் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே புகார் அளிக்கப்பட்ட நிலையில், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் மீன்வளத்துறை உதவி இயக்குநரையும், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரையும் (எஸ்.பி.) சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், “தடை செய்யப்பட்ட கொல்லிமடி வலைகளை தொடர்ந்து பயன்படுத்த அனுமதித்தால், மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தனர்.
500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.




You must be logged in to post a comment.