15 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அஞ்சுகோட்டை அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

அஞ்சுகோட்டை அருகே அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்.!

எழுதியவர்: Baker BAker July 15, 2026, 10:12 pm

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அஞ்சுகோட்டை, மேலவயல், மனதிடல் மற்றும் சீவலாத்தி கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக வழங்கக் கோரி, கிராம மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

 

இந்த கிராமங்களில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த பல மாதங்களாக குடிநீர் விநியோகம் சீராக நடைபெறவில்லை என்றும், இப்பகுதிக்கு வழங்கப்பட்டு வந்த காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் எந்த முன்னறிவிப்பும் இன்றி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

 

இதன் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், மழைக்காலங்களில் ஊரணிகளில் தேங்கும் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் சுகாதாரப் பிரச்சினைகள் அதிகரித்து, பொதுமக்களின் உடல்நலத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

 

இந்தப் பிரச்சினை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறிய கிராம மக்கள், அஞ்சுகோட்டை – மங்கலக்குடி – பாண்டுகுடி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.

 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் திவ்யான் ஜு நிகாம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சாலையிலேயே அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

 

மேலும், தங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய சூழல் உருவாகும் என கிராம மக்கள் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!