தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அரசின் பல்வேறு திட்டப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மாணவர்களுடன் உரையாடினார்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம். அதன் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளை தீர்க்க இன்றைய தினம் (15.07.2026) கடையநல்லூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.






























அதன்படி, கம்பனேரி கிராமத்தில் உள்ள S.S.கிராண்ட் மஹாலில் களஆய்விற்கு செல்வதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து, கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவர்களுக்கு கற்பிக்கும் பாடங்கள் குறித்தும் கேட்டறிந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். மேலும், பள்ளி வளாகத்தை பசுமையான வளாகமாக மாற்றும் விதமாக மாவட்ட ஆட்சியரால் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பின்னர், சொக்கம்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகம், பொது சுகாதார கண்காணிப்பு பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகளை பார்வையிட்டார்
அதனைத் தொடர்ந்து, கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சியில் உள்ள பேச்சி அம்மன் கோவில் தெருவில் OMDGF Peri Urban Panchayat 2022-2023 திட்டத்தின் கீழ் ரூ.4.17 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தினை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தர்மாபுரம் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் துறையின் மூலம் செயல்படும் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டு அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து புன்னையாபுரம் ஊராட்சி வம்சவிருத்தி நகர் பகுதியில் ரூ.7.25 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புளியங்குடி நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் பசுமை மூலம் ரூ.42.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வள மீட்பு பூங்கா, நுண் உரம் தயாரிப்புக் கூடம் ஆகியவை அமையப்பட்டுள்ள பசுமை வளாகத்தினையும், புளியங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சத்துணவு சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புளியங்குடி வடக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினை பார்வையிட்டு, புதிதாக வங்கிக்கணக்கு தொடங்கிய 01 பயனாளிக்கு வங்கிப் புத்தகம் மற்றும் 12 நபர்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் செயல்படும் முதல்வர் மருந்தகத்தினை பார்வையிட்டு இருப்பில் உள்ள மருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, 8, சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் உள்ள நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புளியங்குடி நகராட்சி மூலம் புதிதாக கட்டப்படும் அறிவுசார் மைய கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் புளியங்குடி நகராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புளியங்குடி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, புளியங்குடி நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி அங்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புளியங்குடி நகராட்சி பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாகங்கத்தில் செயல்படும் கடைகளை பார்வையிட்டு, அங்கு கடைகளின் முகப்பில் கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள இடங்களை உடனடியாக அகற்றுமாறு நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.
பின்னர், கம்பனேரி கிராமத்தில் உள்ள S.S.கிராண்ட் மஹாலில் மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பொதுமக்களை சந்தித்து 150 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மாவட்ட வழங்கல் அலுவலகத்தின் மூலம் 03 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினார்.
இந்த ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ராஜேந்திரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நரசிம்மன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் வெங்கட லெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை, மகளிர் திட்ட இயக்குநர் தண்டபாணி, கடையநல்லூர் வட்டாட்சியர் அப்துல்சமது மற்றும் அனைத்து நிலை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முக்கிய குறிப்பு : உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் திட்டத்தை அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக ஜனவரி 31, 2024 அன்று மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட நாள் தாலுகா அளவில் தங்கி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.