தமிழகத்தில் எல்நினோ காரணமாக வெப்ப அலை வீசி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தென்காசி வெதர்மேன் ராஜா கூறியதாவது, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 1 முதல் 8 ம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் நெல்லை, மதுரை, தூத்துக்குடி, வேலூர், சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் வரலாறு காணாத வெயில் பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் வெப்பம் மேலும் உயரும் என்பதால் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு எட்டாம் வகுப்பு வரை செயல்படும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
ஏனெனில் தற்போது வீசும் வெப்ப அலையால் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும். புவி வெப்பம் உயர கார்பன் டை ஆக்சைடு வெளியிடும் அதிக அளவிலான அலைகள் பெட்ரோல், டீசல் பயன்பாடுகள் அதிகரிப்பு, வாகனங்கள் பெருக்கம், மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுவது, பூமியில் உள்ள நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவது, மக்கள் தொகை பெருக்கம், நீராதாரங்களை சீரழிப்பது, ஆற்றில் மணலை அதிகம் அள்ளுவது போன்றவை முக்கிய காரணங்களாகும்.
எனவே போர்க்கால அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகள் சுற்றுச்சூழல் மாசு மற்றும் இயற்கை மாறுபாடு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலக அளவில் இது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை என்றாலும் நமது நாட்டில் இந்த பிரச்சனை எப்படி எதிர்கொள்வது என்பதை அறிவியல் அறிஞர்கள் துணையோடு அரசு நீண்ட கால திட்டங்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
இயற்கையை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை அரசும் மக்களும் கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.