நீதிமன்றக் காவலில் இருந்த கைதி உயிரிழப்பு: சம்பந்தப்பட்ட 3 சிறைத்துறை பணியாளர்கள் கைது..
கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு கிராமத்தைச் சேர்ந்த சசிதரன் மகன் சபரி வர்மன் (35) என்பவர், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக,
சுசீந்திரம் தாழக்குடி (S.T. Kulam) காவல் நிலைய குற்ற எண் 147/2026-ல், COTPA Act பிரிவு 6(a) r/w 24(1) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 123-ன் கீழ் 09.07.2026 அன்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் இருந்த முழு நேரமும் பதிவான கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டதில், அவரிடம் காவல்துறையினர் முறையான விதத்தில் நடந்துகொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக, நடைமுறையின்படி அவருக்கு விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவ அதிகாரி, அவரது உடலில் எந்தவித காயமும் இல்லை என்றும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பத் தகுதியானவர் என்றும் சான்றளித்தார்.
மேலும், நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டபோது, காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டதாக அவர் எந்தவித புகாரும் தெரிவிக்கவில்லை.
அப்போது அவரது உடலில் எந்த காயமும் பதிவாகவில்லை. அதன் பின்னர் அவர் நாகர்கோவில் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
13.07.2026 அன்று, நாகர்கோவில் மாவட்ட சிறையில் நீதிமன்றக் காவலில் இருந்த சபரி வர்மன் உயிரிழந்ததாக தகவல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நடைமுறையின்படி நீதித்துறை நடுவர் விசாரணை (Inquest) மேற்கொள்ளப்பட்டது.
மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழுவினரால், முழுமையான காணொளிப் பதிவுடன் (Videography) உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக, சிறையில் பதிவான CCTV காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கைதிகள் மற்றும் சிறைத்துறை பணியாளர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
மேலும், அறிவியல் மற்றும் ஆவண ஆதாரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
விசாரணையின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், 12.07.2026 இரவு சிறைக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, உயிரிழந்த சபரி வர்மன் சிறைத்துறை பணியாளர்களால் தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட சிறைத்துறை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்:
– N. ஜெஹான் – தரம்-I சிறைக் காவலர் (Grade-I Warder)
– N. சுரேஷ் – தலைமை தலைமைக் காவலர் (Chief Head Warder)
– J. சிவக்குமார் – தரம்-II சிறைக் காவலர் (Grade-II Warder)
இவ்வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.




You must be logged in to post a comment.