மூன்றாம் உலகப்போர் மனிதர்களுக்கு வறட்சியோடும் வெப்பத்தோடும் தான் என்றும், பூமி வெப்பமயமாவதை தடுக்க அனைவரும் தங்களால் முடிந்த பசுமை பணிகளை இன்றே செய்யத் தொடங்குவது அவசியம் எனவும் சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து வெங்காடம்பட்டி பூ.திருமாறன் தெரிவித்ததாவது, பூமியின் பசுமையை பாதுகாக்கும் விதமாக விதைப்பந்து புரட்சியை நாடெங்கும் விரிவுபடுத்தும் பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறேன். தற்போதைய தேவை மரம் அல்ல, மரங்கள். சொல்லப் போனால் ஆங்காங்கே வனங்கள் தோற்றுவிக்கப் பட வேண்டும். சிறு, குறு வனங்கள் மக்கள் தொகை மிகுந்த இந்தியத் துணைக் கண்டத்தில் சாத்தியமா என்றால் நிச்சயம் சாத்தியமே.
சாதாரணமாக செய்யத் தொடங்கிய “விதைப்பந்து புரட்சி” தற்போது 60 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பள்ளி கல்லூரிகளின் பெரும் பங்கினால் தான் இது சாத்தியமாகிறது. விதைப் பந்துகள் பள்ளிகளில் செய்து வீடு திரும்பும் குழந்தைகளின் கைகளில், விரல்களில் தாய், தந்தை எண்ணிலடங்கா முத்தங்களை வழங்குங்கள். இதுவும் போர்க்களத்திலிருந்து திரும்பும் வீர வீராங்கனைகளை வரவேற்பது போலத்தான். வறட்சிக்கு எதிரான உலகப்போரை குழந்தைகள் மேற்கொள்கின்றார்கள்.
வெப்பத்தை வென்றிட திட்டப் பணிகளால் விதைப்பந்து செய்து பூமியில் எறிவதும் ஒருவகை விவசாயப் போர் தான். எல்லோரும் விழித்துக் கொள்ள வேண்டும. முக்கியமாக வசதி படைத்தோர், கார் ஜன்னல் கண்ணாடிகளை ஒருபோதும் திறந்து பயணிக்காதவர்கள், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மட்டுமே குடித்து வாழ்பவர்கள், கற்பிக்கத் தெரியும் என நினைத்துக் கொண்டு கற்க மறந்து போனவர்கள், அடுத்த தலைமுறை மீது அக்கறை இல்லாதோர், மண்ணின் அருமை தெரியாதோர், மக்களின் மாண்பு புரியாதோர், தயவு செய்து விழித்துக் கொள்ள வேண்டும். பூமியின் பசுமையை பாதுகாப்பது அனைவரின் கடமையாக உள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் விதைப்பந்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி விதைப்பந்து தயாரிக்கும் பணியில் இணைந்து கொள்ள 7708775647 என்ற எண்ணில் அழைக்கலாம் என பசுமை ஆர்வலர் பூ.திருமாறன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.