இளைஞர்களின் கோரிக்கைக்கு உடனடி தீர்வு – ஆபத்தான மின் கம்பம் மாற்றம்: கீழக்கரை மின்வாரிய அதிகாரிகளுக்கு பாராட்டு
பொதுமக்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு விரைந்து செயல்பட்ட மின்வாரியத்துறைக்கு புது கிழக்கு தெரு இளைஞர்கள் சங்கம் வாழ்த்து
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பட்டாணியப்பா செல்லும் சாலையில், புது கிழக்கு தெரு அருகே நீண்ட ஆண்டுகளாக சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம் பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்தது. குறிப்பாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் மின் கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் தினமும் சிரமத்துடன் பயணித்து வந்தனர்.
இந்த நிலையை கருத்தில் கொண்டு, கீழக்கரை புது கிழக்கு தெரு இளைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மின்வாரிய அதிகாரிகளிடம் பழுதடைந்த மின் கம்பத்தை உடனடியாக அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இளைஞர்களின் நியாயமான கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்ட கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள், தாமதமின்றி ஆய்வு மேற்கொண்டு பழைய மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பத்தை அமைத்தனர். இதன் மூலம் நீண்டகாலமாக நிலவி வந்த விபத்து அபாயம் முற்றிலும் அகற்றப்பட்டு, அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக நடமாடும் சூழல் உருவாகியுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, இளைஞர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து விரைந்து நடவடிக்கை எடுத்த கீழக்கரை மின்வாரியத்துறை அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் புது கிழக்கு தெரு இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், மக்களின் குறைகளை உடனுக்குடன் கவனித்து செயல்படும் அரசு அதிகாரிகளின் இத்தகைய மக்கள் நலப் பணிகள், அரசுத் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.








You must be logged in to post a comment.