14 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » “4 ஆண்டுகளாக என் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை..காப்பாற்றுங்கள்!” – கண்ணீர் மல்க கதறிய மனைவி.!

“4 ஆண்டுகளாக என் கணவர் உயிருடன் இருக்கிறாரா என்பதே தெரியவில்லை..காப்பாற்றுங்கள்!” – கண்ணீர் மல்க கதறிய மனைவி.!

எழுதியவர்: Baker BAker July 14, 2026, 10:27 am

மலேசியாவில் வேலைக்குச் சென்ற கணவர் மாயம்; பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனை – “மாவட்ட ஆட்சியராவது தலையிட்டு என் கணவரை கண்டுபிடித்து சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும்” என ராமநாதபுரம் பெண் உருக்கமான வேண்டுகோள்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள கங்கைவிலாசம் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கிய மேரி, மலேசியாவில் வேலைக்குச் சென்ற தனது கணவர் டேவிட் கடந்த நான்கு ஆண்டுகளாக மாயமான நிலையில் இருப்பதாகவும், இதுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மேலும் அவர் , “என் கணவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பதே தெரியவில்லை. படிப்பறிவும், பொருளாதார வசதியும் இல்லாத என்னால் மலேசியாவுக்குச் சென்று தேட முடியவில்லை. பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

“குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்த வேண்டும் என்ற நம்பிக்கையில் என் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றார். அவர் சம்பாதித்து அனுப்பும் பணத்தில் குழந்தைகளைப் படிக்க வைக்கலாம் என்று கனவு கண்டோம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக அவர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் தினமும் கண்ணீருடன் வாழ்ந்து வருகிறோம். தற்போதைய மாவட்ட ஆட்சியராவது மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, என் கணவரின் நிலையை கண்டறிந்து அவரை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சம்பவம் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் காணாமல் போகும் தமிழர்களை மீட்பதில் விரைவான அரசு நடவடிக்கையின் அவசியத்தை மேலும் வலியுறுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!