தமிழ்நாட்டில் (14.07.2026) இன்று வெப்ப அலை வீச இருப்பதாகவும், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, வேலூர் மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்கும் எனவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆராய்ச்சியாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரப்பதமற்ற வறண்ட மேற்கு திசை காற்றின் காரணமாக இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய கடலோர மாவட்டங்களில் இன்று பகல் நேர வெப்பநிலை கடுமையாக இருக்கும். மதுரை, வேலூர், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களிலும் இன்று அனல் பறக்கும்.
தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும். உடலில் நீரிழப்பை தடுக்க இளநீர் மோர் உள்ளிட்ட இயற்கை பானத்தை அருந்தவும். குறிப்பாக கர்ப்பிணிகள் முதியவர்கள் நண்பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும். பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கண்டிப்பாக அதிகளவு நீர் அருந்தவும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக சாத்தான்குளம் தாலுகா மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். சாத்தான்குளம் மற்றும் திசையன் விளை தாலுகாவில் இன்று 104°F வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது. எனவே நண்பகல் நேரத்தில் வெளியே செல்லும் போது ஒரு விதமான மயக்கம் அசௌகரியமான சூழல் ஏற்பட வாய்ப்பு. இவ்வாறு தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.