மழலை மாணவியின் உருக்கமான கோரிக்கை; குழந்தைகள், பெற்றோருடன் ஆட்சியரிடம் மனு – விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாலாந்தரவை ஊராட்சியின் தேவேந்திரர் நகர் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர், பள்ளிக்குச் செல்ல அரசு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தேவேந்திரர் நகர் பகுதியில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரெகுநாதபுரம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். பேருந்து வசதி இல்லாததால், தினமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து தெற்காட்டூர் பகுதிக்குச் சென்று அங்கிருந்து பேருந்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மனு வழங்க வந்த மாணவர்களில் ஒரு சிறுமி, “முதல்வரே… நாங்கள் பள்ளிக்குப் போக அரசு பேருந்து தாருங்கள்” என்று மழலைக் குரலில் விடுத்த கோரிக்கை, அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை நெகிழச் செய்தது.
மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தேவேந்திரர் நகர் பகுதிக்கு உடனடியாக அரசு பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மாணவர்கள் தங்களது அடிப்படை போக்குவரத்து வசதிக்காக மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாகவும், தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.