ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தின் நிலை, அரசு திட்டங்கள் எவ்வாறு அலட்சியத்தால் பாதியில் முடங்குகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.
குழந்தைகளின் நலனுக்காக அரசு ஒதுக்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடம் இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்தக் கட்டிடம் சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இயங்கி வந்த பழைய அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்ததால், புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர் நகராட்சி நிர்வாகத்திடமும், நகர்மன்றக் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, பழைய கட்டிடம் இடிக்கப்பட்டது.
ஆனால் புதிய கட்டுமானம் தொடங்கிய சில நாட்களிலேயே பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு இன்று வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இதனால் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக மாற்று இடத்தில் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடமும் பழுதடைந்த நிலையில் இருப்பதுடன், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய சூழலில் பிஞ்சுக் குழந்தைகள் கல்வி கற்று வருவதாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், பாதியில் நிற்கும் புதிய அங்கன்வாடி கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் சட்டவிரோதமாக மது வாங்கி வந்து அந்தக் கட்டிடத்தில் அமர்ந்து குடிப்பதுடன், காலி மதுபாட்டில்கள் மற்றும் குப்பைகளை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். சிலர் அங்கேயே தங்கியும் வருவதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளுக்காக கட்டப்படும் கட்டிடம் இவ்வாறு சமூக விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கீழக்கரை நகராட்சி ஆணையாளர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்தின் பலமுறை கோரிக்கையை வைத்துள்ளனர் , ஒப்பந்ததாரர்களை குறை கூறுவதை தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது
இது தொடர்பாக ஒப்பந்தர்களிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு, ஒப்பந்ததாரர்கள் “நிதி முறையாக வழங்கப்படவில்லை” என விளக்கம் அளிப்பதையும் தவிர, பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு ஒதுக்கும் நிதி மக்களின் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே திட்டங்களின் நோக்கம். ஆனால் நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் கட்டுமானம் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுவது நிர்வாக அலட்சியத்தின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் பயன்பெற வேண்டிய திட்டங்களில் இத்தகைய தாமதம் ஏற்படுவது கவலைக்குரியது என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு முதன்மை என்பதை கருத்தில் கொண்டு புதிய அங்கன்வாடி கட்டுமானத்தை உடனடியாக நிறைவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும், முடிக்கப்படாத கட்டிடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் காவல்துறை மற்றும் நகராட்சி இணைந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய பாதுகாப்பற்ற கட்டிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் ஏற்க வேண்டிய நிலை உருவாகும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் எந்த நிர்வாக அலட்சியத்திற்கும் பலியாகக் கூடாது என்பதே பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகாரிகள் இது தொடர்பான செயல்பாடுகளை ஆய்வு செய்து, பாதுகாப்பான அங்கன்வாடி கட்டிடத்தை உடனடியாக குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் வலியுறுத்தலாக உள்ளது.









You must be logged in to post a comment.