ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் 9-வது வீதியின் பின்புறப் பகுதியில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாழ்வாகச் செல்லும் மும்முனை மின்கம்பிகள் பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ள நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பிகள் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது தரைமட்டத்திற்கு மிகத் தாழ்வாகத் தொங்குகின்றன. அவற்றின் நிலைமை எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்றால், அவ்வழியாகச் செல்லும் மாடுகளின் முதுகில் கூட மின்கம்பிகள் உரசும் அளவிற்கு அபாயகரமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆபத்தான நிலை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்தவித நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதற்கு பதிலாக, மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசாமல் இருக்க காய்ந்த பனைமர மட்டைகளை வைத்து தற்காலிகமாகப் பிரித்து கட்டியிருப்பது, அதிகாரிகளின் அலட்சியத்திற்கே சாட்சியாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என தினமும் நூற்றுக்கணக்கானோர் நடமாடும் இந்தப் பகுதியில், எந்த நேரத்திலும் மின்விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நிகழக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஒரு பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
“விபத்து நடந்த பிறகு நடவடிக்கை அல்ல; விபத்து நடக்காமல் தடுப்பதே அரசின் கடமை” என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் உணர்ந்து, உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு, தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப உயர்த்தி நிரந்தரமாகச் சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மின்வாரிய உயர் அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்




You must be logged in to post a comment.