நிலக்கோட்டையை அடுத்த, மட்டப்பாறை பகுதியில் 5 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தை. கண்டுகொள்ளாத வனத்துறையினரால், பொதுமக்கள், விவசாயிகள் கடும் அச்சம்.
நிலக்கோட்டையை அடுத்த, மட்டப்பாறை மற்றும் விவசாயத் தோட்டப் பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக சுற்றித் திரியும் சிறுத்தையால் பொதுமக்கள், விவசாயிகளால் கடும் அச்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த, மட்டப்பாறை அருகே, தாதம்பட்டி கண்மாய் பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக சிறுத்தை ஒன்று உலாவுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏற்கனவே மட்டப்பாறையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தனது தோட்டத்திற்கு சிறுத்தை வந்ததாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமராவை வைத்து மட்டப்பாறை நெல் வயல் பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேடியதாக கூறப்படுகிறது. வனத்துறை அதிகாரிகள் தேடிய போது, சிறுத்தை கேமராவில் சிக்கவில்லை.
இந்நிலையில், பொதுமக்கள், விவசாயிகள் சிறுத்தையை பார்த்தால், வனத்துறையினருக்கு தகவல் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டனர்.
ஆனால், வெள்ளிக்கிழமை இரவு மட்டப்பாறை கிராமத்திற்குள் ஆங்காங்கே சிறுத்தை நடமாடும் சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இரவில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல் மட்டப்பாறையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தோட்டத்திற்குச் சென்றார். அப்போது வயலில் மிக வேகமாக சத்தத்துடன் சிறுத்தை வந்ததை பார்த்து, தனது மொபைல் கேமராவில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு அச்சத்துடன் தப்பி கிராமத்திற்கு ஓடி சென்று விட்டார். அந்த கேமராவில் பதிவு செய்யப்பட்ட படத்தில் இருக்கும் சிறுத்தை சில தினங்களாக உணவின்றி பசியுடன் வெறி பிடித்தது போல், இரவில் கிராமத்திற்குள்ளும், பகலில் தோட்டங்களுக்குள்ளும் சுற்றி திரிந்துள்ளது. இதனால், அந்த பகுதியில் பொதுமக்கள் அச்சமடைந்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், வனத்துறையினர் பொதுமக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் அஜாக்கிரதையாக உள்ளதாக கூறப்படுகிறது.இதனால், ஓரிரு தினங்களில் விவசாய பகுதிகளில் உலாவும் சிறுத்தையை பிடிக்கா விட்டால், பொது மக்கள் திரண்டு போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மட்டப்பாறை விவசாய தோட்ட பகுதிகளில் உலாவும் சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து பிடிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




You must be logged in to post a comment.