ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் மீன் மார்க்கெட்டால் தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், நோயாளிகள், மாணவர்கள் மற்றும் அரசு பேருந்து பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கீழக்கரை நகராட்சிக்குச் சொந்தமான பழைய மீன் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்ததால் இடிக்கப்பட்டு, புதிய மீன் மார்க்கெட் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நகர்மன்ற கூட்டங்களில் பலமுறை எழுப்பப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிக்கையின் அடிப்படையில் நகர்மன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து தீர்மானங்களையும் நிறைவேற்றினர்.
புதிய கட்டிடம் கட்டப்படும் வரை நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல், தனியார் இடத்தில் மீன் மார்க்கெட் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக புதிய பேருந்து நிலையம் அருகே தினந்தோறும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக தொலைதூர அரசு பேருந்துகள் நிலையத்திற்குள் நுழைய முடியாமல், முக்கு ரோடு வழியாக திரும்பிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இதனால் பயணிகளும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
மேலும், அதே பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருவதால், நோயாளிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவமனைக்குச் செல்வதிலும் கடும் சிரமம் ஏற்படுகிறது. அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தாமதமாகும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் தினமும் இந்த நெரிசலால் பாதிக்கப்படுகின்றனர். மீன் மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்படுவதும், சிலர் வாகனங்களிலேயே பழங்கள் காய்கறிகள் விற்பனை செய்வதும் போக்குவரத்தை மேலும் மோசமான சிக்கலை ஏற்படுத்தி வருகிறது
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பலமுறை வலியுறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“நகராட்சியின் மெத்தனப்போக்கால் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். தனியார் மீன் மார்க்கெட்டை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். புதிய மீன் மார்க்கெட் கட்டப்படும் வரை நகராட்சி இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைத்து மீனவர்களுக்கு வழங்க வேண்டும். புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்று பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








You must be logged in to post a comment.