09 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் – நிதி முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை.!

திருவாடானையில் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம் – நிதி முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த கோரிக்கை.!

எழுதியவர்: Baker BAker July 9, 2026, 11:21 pm

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சாலை வசதி கோரியும், சாலை அமைக்கப்படாமலேயே அரசுப் பணம் பெறப்பட்டதாகக் கூறப்படும் நிதி முறைகேடு குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வலியுறுத்தியும், கீழ அரும்பூர், முகில்தகம்–ஏசுபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறுகையில், குளத்தூர் விளக்கு முதல் கீழ அரும்பூர் வழியாக திருவொற்றியூர் இணைப்புச் சாலை மற்றும் முகில்தகம்–ஏசுபுரம் முதல் நம்புதாளை வரையிலான சாலைகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கப்படாமல் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், இந்த காலகட்டத்தில் சாலை அமைக்கப்படாத நிலையிலும், தார்ச் சாலை அமைக்கப்பட்டதாகக் கணக்குகள் தயாரித்து, அதற்கான நிதி பெறப்பட்டுள்ளதாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சாலை வசதி இல்லாததால் மாணவர்கள், விவசாயிகள், முதியோர், நோயாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும், மழைக்காலங்களில் கிராமங்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

“பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை அமைக்கப்படாமலேயே நிதி எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். உடனடியாக தரமான சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் போராட்டம் மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்,” என்று போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.

இந்தப் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு நிர்வாகி சந்தானம் தலைமையில் நடைபெற்றது. கீழ அரும்பூர் நாச்சியார் மற்றும் முகில்தகம்–ஏசுபுரம் ஆரோக்கியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டச் செயலாளர் குருவேல், தாலுகா செயலாளர் ஜெயகாந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தால் திருவாடானை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் நிலவுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!