09 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகரமன்ற கூட்டத்தில் மீன் மார்க்கெட் விவகாரம் வெடித்தது!

கீழக்கரை நகரமன்ற கூட்டத்தில் மீன் மார்க்கெட் விவகாரம் வெடித்தது!

எழுதியவர்: Baker BAker July 9, 2026, 9:36 pm

!

“மக்கள் நலத் திட்டங்கள் புறக்கணிப்பு; மீன் மார்க்கெட்டை உடனே அமைக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முற்றுகை” – நகர்மன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நகரமன்ற கூட்டம், மீன் மார்க்கெட் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல விவகாரங்களை மையமாகக் கொண்டு காரசாரமான விவாதங்களால் பரபரப்பாக நடைபெற்றது.

நகரமன்றத் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையிலும், நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணவேணி முன்னிலையிலும் நடைபெற்ற கூட்டத்தில், நகர்மன்ற உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

கூட்டத்தில் பேசிய உறுப்பினர்கள், கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் தனியார் மீன் மார்க்கெட் பொதுமக்களுக்கும் வாகன போக்குவரத்துக்கும் கடும் நெரிசலும் இடையூறும் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கு நிரந்தர தீர்வாக, புதிய பேருந்து நிலையம் அருகே இடிக்கப்பட்ட நகராட்சி மீன் மார்க்கெட்டை மீண்டும் உடனடியாக கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், புதிய கட்டிடம் அமைக்க காலதாமதம் ஏற்பட்டாலும், குறைந்தபட்சம் தற்காலிக ஷெட் அமைத்து மீனவர்களும் பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடந்த நகரமன்ற கூட்டத்திலேயே இதே தீர்மானம் வலியுறுத்தப்பட்ட நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது கண்டனத்திற்குரியது என்றும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தனியார் மீன் மார்க்கெட் செயல்படுவதற்கு நகராட்சி அதிகாரிகளில் சிலர் மறைமுக ஆதரவு வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

“மீன் மார்க்கெட் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்தனர் .

இதனைத் தொடர்ந்து, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, அடிப்படை வசதிகள், நகராட்சி பணிகளின் தரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் நலன் சார்ந்த பல முக்கியப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், ஒதுக்கப்படும் நிதி பொதுமக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்காமல், வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பழுதுபார்ப்பு போன்ற பணிகளுக்கே அதிகம் முன்னுரிமை கொடுப்பதாக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், நகராட்சி மூலம் வழங்கப்படும் ஒப்பந்தப் பணிகளில் தரக்குறைவு இருப்பதாகவும், தரமற்ற பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தேவையான இடங்களில் ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். பணிகளின் தரத்தை அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை என்றும் கூட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

நகர்மன்ற உறுப்பினர்கள் எழுப்பிய இந்த கோரிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீது நகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது கீழக்கரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!