தென்காசி மாவட்டத்தில் தற்போது வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராசா பொது மக்களுக்கு சாலை போக்குவரத்து குறித்தும், வாகனங்களை கவனமாக இயக்குவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விழிப்புணர்வு வீடியோவில் சமூக ஆர்வலர் பாண்டியராசா தெரிவித்துள்ளதாவது: தென்காசி மாவட்டம் தமிழ்நாட்டிலேயே மிக வருத்தப்படக்கூடிய விபத்துகள் விஷயத்திலும், அதிக உயிரிழப்புகள் நடக்கும் மாவட்டங்களின் பட்டியலிலும் முதலிடத்தில் இருக்கிறது.
கடந்த ஒரு வார காலத்திற்குள் மட்டும் மூன்று கொடூரமான விபத்துகள் நடந்துள்ளன.
1. சங்கரன்கோவில் – திருநெல்வேலி சாலையில் ஒரு ஆசிரியை இடது பக்கம் வரும் வாகனங்களைப் பார்த்துக் கொண்டே, கவனக்குறைவாக வலது பக்கம் திரும்பிய போது, சங்கரன்கோவிலில் இருந்து அதிவேகமாக வந்த கார் மோதி உயிரிழந்தார்.
2. சிவகிரி அருகே பேரக் குழந்தைகளுடன் காரில் பயணித்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவரின் கார் மரத்தில் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
3. பாவூர்சத்திரம் அருகே சென்டர் மீடியனை (Center Median) ஒட்டி தவறான திசையில் (Wrong Side) சென்ற இருசக்கர வாகனம், கேரளாவை நோக்கிச் சென்ற கார் மீது மோதியதில் பைக்கில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
இந்த விபத்துகளுக்கான மிக முக்கிய காரணமாக கவனக்குறைவு உள்ளது. சிறிய சாலையில் இருந்து பெரிய சாலைக்கு வரும்போது, இருபுறமும் வாகனங்கள் வருகிறதா என்று கவனிக்காமல் அலட்சியமாக நுழைவது, போக்குவரத்து விதிகளை மீறி தவறான பாதையில் (Wrong Side) வாகனங்களை ஓட்டுவது மற்றும் சாலை விதிகளை மதிக்காமல் இருப்பதும் முக்கிய காரணங்களாக உள்ளது.
மேலும், 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு பைக், கார் போன்ற வாகனங்களை ஓட்ட அனுமதிப்பதும், அதிவேகமாக வாகனங்களை இயக்குவதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதும் விபத்துகள் ஏற்பட பிரதான காரணங்களாக உள்ளன.
எனவே பெற்றோர்கள் 18 வயதிற்கு உட்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு எக்காரணம் கொண்டும் வாகனங்களை ஓட்டக் கொடுக்கக் கூடாது. இது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். தற்போது குற்றால சீசன் தொடங்கி நடைபெற்று வருவதால், தென்காசியில் வாகன நெரிசல் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் அவசரப்படாமல், ஒரு நிமிடம் நின்று இருபுறமும் கவனித்து, சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு சமூக ஆர்வலர் பாண்டியராசா கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.