ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பா௹ர் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்திற்காக விவசாய நிலங்களில் அதிகாரிகள் முன்அறிவிப்பின்றி அளவீடு மேற்கொள்ள முயன்றதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 398 ஏக்கர் விவசாய நிலங்கள் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திருவாடானை வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்றனர்.
அப்போது, பொதுமக்களுக்கு எவ்வித முன்அறிவிப்பும் வழங்காமல் நில அளவீடு செய்ய முயன்றதாகக் குற்றம்சாட்டிய விவசாயிகள் மற்றும் கிராம மக்கள், சம்பவ இடத்தில் திரண்டு அதிகாரிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியதுடன், அதிகாரிகள் தங்களது நடவடிக்கையை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலர், “சிப்காட் திட்டம் தொடர்பாக இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மட்டுமே வந்தோம்” என்று விளக்கம் அளித்தார். எனினும், அதிகாரிகள் எல்லைக் கம்பிகள் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “பல தலைமுறைகளாக நாங்கள் நம்பி வாழும் விளைநிலங்களே எங்களின் வாழ்வாதாரம். தொழிற்பேட்டை அமைந்தால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். எங்களின் கருத்தை கேட்காமல் திட்டங்களை திணிக்கக் கூடாது. சிப்காட் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட்டு, இப்பகுதியை விவசாயப் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
மேலும், அரசின் நடவடிக்கை தொடருமானால், அனைத்து கிராம மக்களையும் ஒன்றிணைத்து ஜனநாயக வழியில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.




You must be logged in to post a comment.