கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வணிகவியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் சிவஞானசித்தி தலைமை வகித்து, கல்லூரி நிர்வாக நடைமுறைகள், கல்வி ஒழுங்குமுறைகள் மற்றும் கல்லூரியில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார்.
தமிழக அரசின் “நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாடத்திட்டங்கள், அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் மூலம் மாணவர்கள் பெறும் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் தங்கராஜ் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, தேர்வு முறைகள், வினாத்தாள்களின் வகைகள், மதிப்பீட்டு முறை, மதிப்பெண் வழங்கும் நடைமுறைகள் மற்றும் தேர்வில் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகள் குறித்து வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் சின்னமணி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவ, மாணவிகள், கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மாணவர்களுக்கு கல்லூரி வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலையும், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வழிகாட்டுதலையும் வழங்கியதாக அமைந்தது.




You must be logged in to post a comment.