03 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 46 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது.!

இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 46 கிலோ கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது.!

எழுதியவர்: Baker BAker July 3, 2026, 7:38 am

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா, கடலட்டை, மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஒரு கடத்தல் முயற்சியை கியூ பிரிவு போலீசார் முறியடித்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள புது மாயாகுளம் கடற்கரை வழியாக படகு மூலம் இலங்கைக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் இருந்து மொத்தம் 46 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

இதுதொடர்பாக கீழக்கரை அருகே மாயாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜெசிர், முசாரப் மற்றும் கருணை முகமது அனஸ் ஆகிய மூவரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

 

கைது செய்யப்பட்ட மூவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தக் கஞ்சா எந்தப் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது, இலங்கையில் யாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது, இந்தக் கடத்தலுக்குப் பின்னால் செயல்படும் கும்பல் மற்றும் அதற்கு தொடர்புடையவர்கள் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!