இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் தோளோடு தோள் இணைந்து கொண்டாடிய ஒற்றுமை விழா – திருவாடானை அருகே மத நல்லிணக்கத்திற்கு உயிரூட்டிய பாசிப்பட்டினம் தர்கா சந்தனக்கூடு திருவிழா
மத வேறுபாடுகளை மறந்து மனிதநேயமும் ஒற்றுமையும் ஒன்றிணையும் அரிய நிகழ்வாக, திருவாடானை அருகே பாசிப்பட்டினத்தில் உள்ள சர்தார் நைனா முகம்மது ஒலியுல்லா தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகேயுள்ள பாசிப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த தர்கா, பல ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் எந்தப் பாகுபாடுமின்றி ஒன்றிணைந்து பங்கேற்பது இவ்விழாவின் தனிச்சிறப்பாகும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த ஜூன் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தலைப்பிறை நிகழ்ச்சி, ரத ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவின் உச்ச நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு, மாணவநகரி மற்றும் ஸ்தானிகன்வயல் பகுதிகளில் இருந்து புறப்பட்டு, எஸ்.பி. பட்டினம், மருங்கூர் வழியாக இன்று அதிகாலை பாசிப்பட்டினம் தர்காவை வந்தடைந்தது. பின்னர் தர்காவை மூன்று முறை வலம் வந்து, தர்காவின் முன்பு நிறுத்தப்பட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வழிபாடு செய்தனர். சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி மக்கள் ஒரே குடும்பமாக இணைந்து கொண்டாடிய இந்த விழா, மத நல்லிணக்கம் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.
பாசிப்பட்டினம் தர்கா விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் ஜூலை 15-ஆம் தேதி கொடியிறக்கத்துடன் நிறைவடைய உள்ளது.




You must be logged in to post a comment.