24 August 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » 50 ஆண்டுகளாக மனுக்கள்… இன்னும் ஜாதி சான்றிதழ் இல்லை.!”படிக்க சான்றிதழ் வேண்டும்… எங்களை காப்பாற்றுங்கள்!” – காட்டு நாயக்கர் மாணவர்களின் உருக்கமான வீடியோ வைரல்;

50 ஆண்டுகளாக மனுக்கள்… இன்னும் ஜாதி சான்றிதழ் இல்லை.!”படிக்க சான்றிதழ் வேண்டும்… எங்களை காப்பாற்றுங்கள்!” – காட்டு நாயக்கர் மாணவர்களின் உருக்கமான வீடியோ வைரல்;

எழுதியவர்: Baker BAker July 3, 2026, 7:27 am

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட தேவிபட்டணம் அருகே வசித்து வரும் காட்டு நாயக்கர் பழங்குடியின மக்களின் நீண்டகால ஜாதி சான்றிதழ் கோரிக்கை மீண்டும் சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.



தேவிபட்டணம் அருகே உள்ள பகுதியில் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காட்டு நாயக்கர் பழங்குடியினர் பல தலைமுறைகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு நாயக்கர் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எண்ணற்ற மனுக்கள் அளித்தும், பல்வேறு ஜனநாயக போராட்டங்கள் நடத்தியும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதன் விளைவாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் சேர்க்கை, கல்வி உதவித்தொகை, உயர்கல்வி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத் திட்டங்களைப் பெறுவதில் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கல்விக்கே அடிப்படையாகத் தேவையான ஜாதி சான்றிதழ் இல்லாததால், பல மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.




இந்த நிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், “எங்களுக்கு காட்டு நாயக்கர் ஜாதி சான்றிதழ் வழங்குங்கள். எங்கள் மக்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். படிக்கவும், முன்னேறவும் உதவுங்கள்” என்று அவர்கள் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுவர்களின் இந்த வேண்டுகோள் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.



மக்கள் கூறுவதாவது, பல தசாப்தங்களாக மனுக்கள் அளித்தும், கோரிக்கைகள் வைத்தும், போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காத நிலை தொடர்வது அதிகாரிகளின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமை தொடர்பான கோரிக்கைக்கு இத்தனை ஆண்டுகளாக தீர்வு காணப்படாதது ஏன் என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களிலும் எழுந்து வருகிறது.



இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, உரிய ஆய்வை மேற்கொண்டு தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.



 சான்றிதழ் கிடைக்காமல் பல தலைமுறைகள் காத்திருக்கும் நிலை தொடரக் கூடாது; கல்வி கற்க வேண்டி குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் மூலம் குரல் கொடுக்க வேண்டிய சூழல் மீண்டும் ஏற்படாத வகையில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!