01 July 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார அறிமுகப் பயிற்சி முகாம் .!

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒருவார அறிமுகப் பயிற்சி முகாம் .!

எழுதியவர்: Baker BAker July 1, 2026, 9:30 pm

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026–2027 கல்வியாண்டில் புதிதாகச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வகையில் ஒருவார கால அறிமுகப் பயிற்சி முகாம்  தொடங்கியது.
மாணவர்களுக்கு கல்லூரி சூழல், கல்வி விதிமுறைகள், மாணவர் நலத் திட்டங்கள், அரசின் கல்விச் சலுகைகள் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, குத்துவிளக்கு ஏற்றப்பட்டு சிறப்பாக நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (கூடுதல் பொறுப்பு) முனைவர் க.ஆ. ஜெயசங்கர் வரவேற்புரையாற்றி, அரசுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகைகள், கட்டணச் சலுகைகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், போட்டித் தேர்வுப் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கல்வியுடன் ஒழுக்கம், நேர்மை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்த்துக்கொண்டு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் மோ. செந்தில்குமார், உயர்ந்த இலக்குடன் விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் எனக் குறிப்பிட்டார். கல்லூரி வாழ்க்கை என்பது பட்டம் பெறுவதற்கான காலம் மட்டுமல்ல; திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், தலைமைத்துவப் பண்புகளை மேம்படுத்தவும், நல்ல மனிதர்களாக உருவாகவும் கிடைக்கும் சிறந்த வாய்ப்பாகும் என்றார்.
தேசிய மாணவர் படை (NCC), தேசிய நலப்பணித் திட்டம் (NSS), விளையாட்டு, கலை, இலக்கியம், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட இணைப் பாடத்திட்டச் செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்பதன் மூலம் மாணவர்கள் தங்களது ஆளுமைத் திறனை மேம்படுத்தி, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியின் நிறைவில் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் சி. பாண்டியராஜன் நன்றியுரை வழங்கினார். ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் ஜெ. அபிராமி, கணிதத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் தி. பபிதா ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
முதலாம் ஆண்டு மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்ட இவ்வறிமுகப் பயிற்சி முகாம், அவர்களின் கல்லூரி வாழ்க்கைக்கு தன்னம்பிக்கையூட்டும் சிறப்பான தொடக்கமாக அமைந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!