சென்னையில் தமிழக ரத்தப் பரிமாற்றுக் குழுமத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய இணையதளப் பக்கத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ரத்ததான சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ‘நம்ம மேட்டுப்பாளையம்’ CITU பொதுத் தொழிலாளர் சங்கத்தின் ரத்ததான தன்னார்வக் குழுவினர் ஆற்றி வரும் தன்னலமற்ற சமூகப் பணியைப் பாராட்டி, அமைச்சர் அருண் ராஜ் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
மேலும், சமூக நலப் பணிகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் ‘நம்ம மேட்டுப்பாளையம்’ மற்றும் CITU மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை பயன்படுத்தி, நம்ம மேட்டுப்பாளையம் CITU பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கூடுதல் நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், போதிய மருத்துவர்களை நியமித்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் நேரடியாக வழங்கப்பட்டது.
மனுவைப் பெற்ற அமைச்சர் அருண் ராஜ் அவர்கள், உடனடியாக துறை சார்ந்த உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு சென்று, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தொடர்பான கோரிக்கைகளை விரைந்து பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
மேலும், இந்தக் கோரிக்கைகள் அமைச்சரிடம் சென்றடைய முழு ஒத்துழைப்பும் வழங்கிய மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த் அவர்களுக்கு CITU நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மேட்டுப் பாளையத்திலிருந்து சானவாஸ், முகமது அலி ஜின்னா, ஹபிபுல்லா, அப்துல் ரகுமான் மற்றும் லூயிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.







You must be logged in to post a comment.