‘பசி பட்டினியால் சாவதற்கு முன் எங்களை காப்பாற்றுங்கள்’ – மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் கண்ணீர் மனு; உடனடி நடவடிக்கை கோரி அரசுக்கு வேண்டுகோள்
ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை, திருப்பாலைக்குடி மற்றும் நடராஜபுரத்தைச் சேர்ந்த சுந்தரம், நாகசெல்வம், கண்ணன், ரமேஷ், காளீஸ்வரன் ஆகிய 5 மீனவர்கள், திருப்பாலைக்குடியைச் சேர்ந்த வீரபாண்டியன் மற்றும் சமயக்கண்ணன் ஆகியோரால் சோமாலியா நாட்டில் மீன்பிடி ஒப்பந்த வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அங்கு சென்ற அவர்கள் கடந்த ஐந்து மாதங்களாக ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டும், அதற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், பின்னர் எந்த வேலையும் வழங்கப்படாமல் கைவிடப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் உணவுக்குக் கூட வழியின்றி தெருத்தெருவாக கூலி வேலை செய்து உயிர் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் ஏஜென்டுகள் வீரபாண்டியன் மற்றும் சமயக்கண்ணன் மட்டும் இந்தியா திரும்பிவிட்ட நிலையில், தாங்கள் சோமாலியாவில் ஆதரவின்றி உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பதாக மீனவர்கள் வீடியோ மூலம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில், “சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. பல நாட்களாக பசி, பட்டினியில் தவித்து வருகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் உயிரிழக்கும் சூழல் ஏற்படும். எங்களை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வாருங்கள். எங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு ஏஜென்ட் வீரபாண்டியே பொறுப்பு” என்று கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, சோமாலியாவில் சிக்கித் தவிக்கும் மீனவர்களின் மனைவியரும் உறவினர்களும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தங்கள் கணவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் திரும்பச் செய்ய மத்திய, மாநில அரசுகள் மற்றும் இந்திய தூதரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளித்தனர். மீனவர்கள் அனுப்பிய வீடியோவையும் ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் தகுதியற்ற ஏஜென்டுகளை நம்பி அப்பாவி தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் ஏமாற்றப்படுவது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஏஜென்டுகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, சோமாலியாவில் சிக்கித் தவிக்கும் 5 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு வர தமிழக அரசும், மத்திய அரசும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.




You must be logged in to post a comment.