30 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாழடைந்த ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம்.! அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

பாழடைந்த ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம்.! அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

எழுதியவர்: Baker BAker June 30, 2026, 6:44 pm

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்திற்குட்பட்ட ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகம் பல ஆண்டுகளாக பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளபோதும், அதனை சீரமைக்கவோ அல்லது புதிய கட்டிடம் அமைக்கவோ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகத்தின் கீழ் உள்ள பிச்சை மூப்பன்வலசை, ஏர்வாடி, ஏர்வாடி தர்கா, சின்ன ஏர்வாடி, ஏர்ந்துறை, கொத்தமகன் வாடி, நாச்சியம்மைபுரம், மொட்டைக்கிழவன் வலசை, சடமுனிவலசை, மாரியம்மன் நகர், கல்பாறை உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பட்டா, சிட்டா, வருமானம், இருப்பிடம், சமூகச் சான்றிதழ்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை சேவைகளைப் பெற தினமும் இந்த அலுவலகத்தை நாடி வருகின்றனர்.

ஆனால், பழைய அலுவலகக் கட்டிடத்தின் சுவர்கள் பல இடங்களில் விரிசல் அடைந்துள்ளதுடன், கட்டிடத்தின் மீது மரங்கள் வேர் ஊன்றி வளர்ந்துள்ளதால் அது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக தற்போது கிராம நிர்வாக அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், அந்த வாடகைக் கட்டிடத்திலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லாமை, காத்திருக்கும் மக்களுக்கு அமரும் இருக்கைகள் இல்லாமை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், தினமும் அலுவலகத்திற்கு வரும் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஏர்வாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக புதிய கிராம நிர்வாக அலுவலகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தாலும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சியமான அணுகுமுறையால் அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டிய கிராம நிர்வாக அலுவலகமே இன்று குறைகளின் மையமாக மாறியுள்ளது” என்று வேதனையுடன் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் நலனை விட அலட்சியத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் அதிகாரிகளின் செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

எனவே, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த் துறை உயரதிகாரிகள் உடனடியாக ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகத்தை நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த கட்டிடத்தை அகற்றி, அனைத்து அடிப்படை வசதிகளுடனும் புதிய நிரந்தர கிராம நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை அமைப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் அடிப்படை தேவைகளை புறக்கணிக்காமல், ஏர்வாடி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நிரந்தர தீர்வு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!