29 June 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு .! முதலமைச்சர் ஆற்றிய உரை .!!

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு .! முதலமைச்சர் ஆற்றிய உரை .!!

எழுதியவர்: Baker BAker June 29, 2026, 11:37 pm

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு: மக்கள் மையப்படுத்தப்பட்ட, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (29.06.2026) சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், வெளிப்படையான, நேர்மையான மற்றும் ஊழலற்ற சமூகநீதிக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டு, அதற்கேற்ப அனைத்து அதிகாரிகளும் மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை சேவைகள் தரமாகவும், விரைவாகவும் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். மக்கள் குறைதீர்ப்பு மனுக்களை வெறும் பதிவு செய்வதோடு நிறுத்தாமல், உரிய தீர்வு வழங்கும் வரை தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பாக, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி அல்லது செல்வாக்கைப் பொருட்படுத்தாமல் சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிரபராதிகள் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பு அரசின் மிக உயர்ந்த முன்னுரிமை எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், “No Change and No Compromise” என்ற அணுகுமுறையுடன் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் POCSO வழக்குகளில் தாமதமின்றி நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் சாதி ஊக்குவிப்பு சம்பவங்களை கல்வித்துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிலத் தகராறுகளே பல குற்றச் சம்பவங்களுக்கு காரணமாக இருப்பதால், மாவட்ட அளவிலான நில வழக்கு தீர்வுக் குழுக்களைச் சுறுசுறுப்பாக செயல்படுத்தி, வழக்குகளை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பெண்கள் பாதுகாப்பற்ற பகுதிகள், விபத்து அதிகம் நிகழும் இடங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களில் CCTV கேமராக்கள் நிறுவும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், அதன் முன்னேற்றத்தை மாதந்தோறும் மதிப்பாய்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
போதைப்பொருள் ஒழிப்பில் காவல்துறை நடவடிக்கைகளுடன், விழிப்புணர்வு மற்றும் போதைமுறிவு சிகிச்சை முகாம்களுக்கும் சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், கள்ளச்சாராயம், சட்டவிரோத மணல் கடத்தல், Ponzi மோசடிகள் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தொழிற்சாலை பாதுகாப்பு, பேரிடர் தயார்நிலை, சாலை விபத்து தடுப்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இறுதியாக, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் உண்மையுடனும், நேர்மையுடனும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டு, மக்களுக்கு நல்லாட்சியை வழங்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார். :::

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!