ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாயமான 6 வயது சிறுமி, பக்கத்து வீட்டு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் எம்.எஸ்.கே நகரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாய் தீப்தி, நேற்று இரவு வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், சிறுமியின் வீட்டின் அருகே உள்ள பக்கத்து வீட்டு கிணற்றில் சாய் தீப்தி சடலமாக மிதப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி எவ்வாறு கிணற்றுக்குச் சென்றார்? அவர் தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கடத்திச் சென்று கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவம் எம்.எஸ்.கே நகர் பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் பெரும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





You must be logged in to post a comment.